இந்திய தூதரை சந்திக்கவிடாமல் சீக்கிய பக்தர்களை தடுப்பதா? - பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

Date:2018-04-16

(1523851472)201804160558004985_India-lodges-protest-with-Pakistan-after-consular-team_SECVPF.gif

புதுடெல்லி:

பாகிஸ்தான், இந்தியா இடையே வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு வகை செய்து, இரு தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து 1,800 சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானில் ஹசன் அப்தால் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர்.

வைசாகியையொட்டி அவர்களை பஞ்சா சாகிப் குருத்வாராவில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா புறப்பட்டு சென்றார்.

ஆனால் சீக்கிய பக்தர்கள், அவரை சந்திக்க கூடாது என கருதிய பாகிஸ்தான் அரசு, இந்திய தூதர் அஜய் பிசாரியாவை அங்கு செல்லவிடாமல் வழியிலேயே தடுத்து திருப்பி அனுப்பி விட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பஞ்சா சாகிப் குருத்வாரா செல்ல அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் கூறி விட்டது. இது சீக்கிய பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது. இந்திய அரசுக்கு அதிர்ச்சியை தந்து இருக்கிறது. இது தெளிவான ராஜ்ய ரீதியிலான பிரச்சினை என்று இந்தியா கருதுகிறது.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா நேற்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தானுக்கு சென்று உள்ள சீக்கிய பக்தர்கள், அங்கு இந்திய தூதரையும், தூதரக அதிகாரிகளையும் சந்திக்க விடாமல் தடுக்கப்பட்டு உள்ளனர். குருத்வாராவுக்கு அழைப்பின் பேரில் சென்ற இந்திய தூதர், சீக்கிய பக்தர்களை சந்திக்க விடாமல் பாதுகாப்பு காரணங்களை கூறி திரும்புமாறு கட்டாயப்படுத்தி விட்டனர்.

இது தூதரக உறவுகள் தொடர்பான 1961-ம் ஆண்டின் வியன்னா உடன்படிக்கையை மீறிய செயலாகும். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா நேற்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் இருந்து செல்கிற பக்தர்கள், அங்கு இந்திய தூதரகத்தினரை சந்திப்பது என்பது மரபு ரீதியில் கடைப்பிடித்து வருகிற வழக்கம் ஆகும்.

ஆனால் இந்த ஆண்டு வாகா ரெயில் நிலையத்துக்கு சீக்கிய பக்தர்கள் வந்து சேர்ந்த நிலையில், அவர்களை தூதரக குழுவினர் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய தூதரகம், அடிப்படை ராஜ்ய ரீதியிலான கடமைகளை, மரபு ரீதியிலான கடமைகளை செய்வதில் இருந்தும் தடுத்து விட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg