‘அமைதியான வாழ்க்கைக்காக கொடைக்கானலுக்கு வந்தேன்’ மணிப்பூரை சேர்ந்த சமூகசேவகி இரோம் சர்மிளா பேட்டி

Date:2017-05-27

(1495857167)201705270145564677_Social-workerIromSharmilaInterview_SECVPF.gif

கொடைக்கானல், 

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சமூகசேவகி இரோம் சர்மிளா. இவர் அங்கு ராணுவத்துக்கு வழங்கப்பட்ட விசே‌ஷ அதிகாரத்தை ரத்துசெய்யக்கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள பெருமாள்மலை கிராமத்துக்கு வந்தார். 

அவருடைய காதலர் அயர்லாந்து நாட்டை சேர்ந்த தேஸ்மாண்ட் ஹட்டின் ஹோவிடன் மற்றும் நண்பர்கள் உடன் வந்தார். இவர்கள் பெருமாள்மலையில் உள்ள ஆசிரமத்தில் தியானம் மேற்கொண்டனர்

அமைதியான வாழ்க்கை

இந்த நிலையில் புதுடெல்லி சென்று திரும்பிய அவர், மீண்டும் கொடைக்கானலுக்கு வந்து அப்சர்வேட்டரி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அங்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘தான் அமைதியான வாழ்க்கையினை மேற்கொள்ள உள்ளேன். இதற்கு ஏற்ற இடமாக கொடைக்கானல் உள்ளது. இயற்கை வளம், தூய்மையான காற்று கிடைப்பதால் எனது காதலரை திருமணம் செய்து கொண்டு இங்கேயே வாழப்போகிறேன்’’, என்றார்.

மேலும் அரசியல் மற்றும் போராட்ட களங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், அடுத்த மாதம் தனது திருமணம் நடைபெறும், என்றும் அவர் கூறினார்.

தேர்தலில் தோல்வி

இதுகுறித்து அவருடைய நண்பர்கள் கூறும்போது, அயர்லாந்தை சேர்ந்த தே ஸ்மாண்ட் ஹட்டின் ஹோவிடன் பெங்களூருவில் தங்கி இருந்தபோது, இரோம் சர்மிளா எழுதிய புத்தகங்களை படித்துள்ளார். பின்னர் அவர் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வருவதை பார்த்தவுடன் மணிப்பூர் சென்று அவரை சந்தித்து போராட்டத்தினை கைவிட்டு அரசியலுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனை ஏற்ற இரோம் சர்மிளா கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின்னர் மனஅமைதி வேண்டி பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியின் இயற்கையான சூழ்நிலையால் கவரப்பட்டார். இதன் காரணமாக கொடைக்கானல் நகரில் உள்ள அப்சர்வேட்டரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார், என்றனர்.

திருமணம்

இதனிடையே, கடந்த 23–ந்தேதி இவர்களுக்கு திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் தேஸ்மாண்ட் ஹட்டின் ஹோவிடனுக்கு திருமணத்துக்கு தேவையான பல ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், ஆவணங்கள் கிடைத்தவுடன் கொடைக்கானலிலேயே பதிவு திருமணம் நடைபெறும் என்றும் கூறிய நண்பர்கள் திருமணத்திற்கு பின்னர் போராட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளை சுற்றிப்பார்க்கவும் இரோம் சர்மிளா திட்டமிட்டுள்ளார், என்றனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg