பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது மத்திய அரசுக்கு எதிராக காங்.–7 எதிர்க்கட்சிகள் வியூகம் ரூபாய் நோட்டு பிரச்சினையை எழுப்பி நெருக்கடி கொடுக்க திட்டம்

Date:2016-11-15

(1479181166)201611150311167912_The-parliamentary-session-begins-tomorrow_SECVPF.gif

புதுடெல்லி

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், அதில் ரூபாய் நோட்டு பிரச்சினையை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது பற்றி காங்கிரசும், 7 எதிர்க்கட்சிகளும் கூட்டாக ஆலோசனை நடத்தின.

மக்கள் அவதி
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதனால், அந்த நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து அவர்கள் அவதிப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இது, ஒரு மாத காலம் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில் ரூபாய் நோட்டு பிரச்சினையை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் தலைமையில் அணிவகுக்க முடிவு செய்துள்ளன.

கூட்டாக ஆலோசனை
அதன்படி, பாராளுமன்ற கட்டிடத்தில், டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத்தின் அறையில் எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டாக ஆலோசனை நடத்தின.

அதில், காங்கிரஸ் சார்பில், குலாம்நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி மேல்–சபை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சரத் யாதவ்
ஐக்கிய ஜனதாதளம் சார்பில் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பந்தோபாத்யா, டெரிக் ஓ பிரையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜா, ராஷ்டிரீய ஜனதாதளம் சார்பில் பிரேம் சந்த் குப்தா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் சுஷில் குமார், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் எம்.ராஜமோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், மக்கள் படும் துயரங்களை பாராளுமன்றத்தில் எழுப்பி, மத்திய அரசை நிலைகுலையச் செய்வது பற்றி வியூகம் வகுக்கப்பட்டது. இப்பிரச்சினையில் கூட்டாக செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது.

அ.தி.மு.க., தி.மு.க.
காங்கிரஸ் மற்றும் 7 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளவில்லை.

ரூபாய் நோட்டு பிரச்சினையில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை. அதே சமயத்தில், பரம எதிரிகளான திரிணாமுல் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சில எதிர்க்கட்சி பிரமுகர்கள், டெல்லியில் இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். இன்றும் கூட்டாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg