டிசம்பர் 30–ந்தேதி வரை ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க சேவை கட்டணம் கிடையாது ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Date:2016-11-15

(1479181345)201611150252427092_Until-December-30There-is-no-service-fee-for-ATM_SECVPF.gif


மும்பை,

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க டிசம்பர் 30–ந்தேதி வரை சேவை கட்டணம் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

சேவை கட்டணம்
இந்தியா முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிமான ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்போர் ஏ.டி.எம். எந்திரம் மூலம், தங்கள் பணத்தை எடுக்கும் வசதி உள்ளது. ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்போர் அதே வங்கியின் ஏ.டி.எம்.மில் இருந்து ஒரு மாதத்தில் 5 முறை சேவை கட்டணம் எதுவும் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம். அதாவது பணம் எடுப்பது, இருப்பு தொகையை பார்ப்பது உள்ளிட்ட சேவைகளை 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்தினால், ஒவ்வொரு முறை பயன்படுத்துவதற்கும் தலா ரூ.20 சேவை கட்டணமாக வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

இதேபோல் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய 6 பெரு நகரங்களில் பிற வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரத்தை 3 முறைதான் இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் ஒவ்வொரு தடவை பயன்படுத்தும் போதும் சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.

சில்லரை தட்டுப்பாடு
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2,000 நோட்டுகள் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்கள் இன்னும் மாற்றி அமைக்கப்படாததால் ஏ.டி.எம்.களில் தற்போது 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வைக்கப்படுகின்றன.

எனவே அதில் உள்ள பணம் விரைவில் தீர்ந்து விடுகிறது. இதனால் பணம் எடுப்பதற்காக வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

சேவை கட்டணம் ரத்து
இதைத்தொடர்ந்து, அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்.களை பயன்படுத்துவற்கான சேவை கட்டணம் வருகிற டிசம்பர் 30–ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. அதாவது எந்த வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்தினாலும் சேவை கட்டணம் கிடையாது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8–ந்தேதி இரவு அறிவிக்கப்பட்டது. அதற்கு மறுநாள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு 10–ந்தேதி முதல் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த சேவை கட்டணம் ரத்து நடவடிக்கை கடந்த 10–ந்தேதி முதல் டிசம்பர் 30–ந்தேதி வரை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg