- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி எழுச்சி பெறுமா? புனேவுடன் இன்று மோதல்
சென்னை,
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.
39–வது லீக் ஆட்டம்
8 அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 39–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி–எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி எழுச்சி பெறுமா?
கவுகாத்திக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி கண்ட சென்னை அணி அதன்பிறகு நடந்த 5 ஆட்டங்களில் வெற்றியை சுவைக்கவில்லை. 2 ஆட்டத்தில் தோல்வி கண்டது. 3 ஆட்டத்தில் டிரா கண்டது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. ஒருபோதும் இல்லாத வகையில் சென்னை அணி 14 கோல்களை எதிரணிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. வீழ்ச்சியில் இருந்து சென்னை அணி எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
5–வது இடத்தில் இருக்கும் புனே அணி இந்த சீசனில் வெளியூர் மைதானத்தில் தோல்வியை சந்தித்தது இல்லை. கடைசி 2 லீக் ஆட்டங்களில் மும்பை, கொல்கத்தா அணிகளை புனே அணி வென்ற உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்தில் களம் காணும். இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
அரை இறுதி வாய்ப்பு உள்ளது
இந்த போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி அளித்த பேட்டியில், ‘அரை இறுதிக்கு முன்னேற எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. கடைசி இடத்தில் உள்ள கோவா அணியும் அரை இறுதிக்குள் நுழைய முயற்சி செய்கிறது. அவர்களால் முடியும் என்றால் எங்களாலும் முடியும். கேரளா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வென்று இருந்தால் ஆட்டம் வேறு மாதிரி இருந்து இருக்கும். நாங்கள் வெற்றிக்காக போராடி கொண்டிருப்போம். அணி வெற்றி பெறும் போது ஆதரவு அளிப்பது எளிது. ஆனால் அணி மோசமான நிலையில் இருக்கும் போது ஆதரவு அளிக்கும் ரசிகர்கள் தான் எங்களுக்கு தேவை’ என்று தெரிவித்தார்.
புனே அணியின் பயிற்சியாளர் ஆன்டோனியோ ஹபாஸ் கருத்து தெரிவிக்கையில், ‘அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் தான் இருக்கிறது. இந்த தருணத்தில் அனைத்து அணிகளும் முன்னேற துடிப்பதால் எங்களின் போட்டிகள் கடுமையானதாகவே இருக்கும். சென்னை அணி எங்களுக்கு பலத்த போட்டியை தரும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த தொடரில் இது முக்கியமான கட்டம். பலம் வாய்ந்த சென்னை அணியை எதிர்நோக்குகிறோம். மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்கள் இலக்காகும்’ என்றார்.
நேரடி ஒளிபரப்பு
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் விஜய் சூப்பர் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
புள்ளி பட்டியல்
அணி ஆட்டம் வெற்றி டிரா தோல்வி புள்ளி
டெல்லி 10 4 5 1 17
கேரளா 10 4 3 3 15
மும்பை 10 4 3 3 15
கொல்கத்தா 9 3 4 2 13
புனே 9 3 3 3 12
கவுகாத்தி 9 3 1 5 10
சென்னை 9 2 4 3 10
கோவா 10 3 1 6 10