- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: போர்ச்சுகல் அணி வெற்றி
பாரோ,
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி 4–1 என்ற கோல் கணக்கில் லாத்வியாவை தோற்கடித்தது.
உலக கோப்பை தகுதி சுற்று
32 அணிகள் இடையிலான உலக கோப்பை கால்பந்து போட்டி 2018–ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் ரஷியாவை தவிர எஞ்சிய அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
இதில் ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள. ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக போட்டிக்கு தகுதி பெறும். பிரிவில் 2 வது இடம் பிடிக்கும் சிறந்த 8 அணிகள் 2–வது சுற்றில் விளையாடும். உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக போட்டிக்கு முன்னேறும்.
போர்ச்சுகல் வெற்றி
இதன் ‘பி’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல்–லாத்வியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் போர்ச்சுகல் அணி அபாரமாக செயல்பட்டு 4–1 என்ற கோல் கணக்கில் லாத்வியாவை தோற்கடித்தது.
இந்த போட்டியில் போர்ச்சுகல் அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 28–வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும், 85–வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார். அவர் மற்றொரு பெனால்டி வாய்ப்பை வீணடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். போர்ச்சுகல் அணி தரப்பில் வில்லியம் கார்வால்ஹோ 70–வது நிமிடத்திலும், புருனோ ஆல்வ்ஸ் 90–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். லாத்வியா அணி தரப்பில் அர்துர்ஸ் 67–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.
பெல்ஜியம் அணி எளிதில் வெற்றி
4–வது ஆட்டத்தில் ஆடிய போர்ச்சுகல் அணி பெற்ற 3–வது வெற்றி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டு இருந்தது. 4–வது ஆட்டத்தில் ஆடிய லாத்வியா சந்தித்த 3–வது தோல்வி இதுவாகும். இந்த பிரிவில் 4 ஆட்டத்தில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று சுவிட்சர்லாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
‘எச்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் அணி 8–1 என்ற கோல் கணக்கில் எஸ்தோனியாவை எளிதில் தோற்கடித்து 4–வது வெற்றியை ருசித்ததுடன் தனது பிரிவில் முதலிடத்தில் தொடருகிறது.