பிரதமரின் அறிவிப்பு எதிர்விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது: கருணாநிதி

Date:2016-11-15

(1479182189)201611150720302952_Karunanidhi-report-opposition-effects-creative-PM_SECVPF.gif

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால், இந்திய நாட்டு மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும், அடித்தள மக்களும், உழைத்துப் பிழைக்கும் பிரிவினரும், அன்றாடங்காய்ச்சிகளும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கடந்த சில நாட்களாக கண்டு வருகிறோம்.

எனது உடல் நலம் சிறிது குன்றியுள்ள நிலையில், நாட்டில் நாள்தோறும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எனது இதயத்தைப் பெரிதும் பாதித்துள்ளன.

வங்கிகளில், தபால் நிலையங்களில் பழைய நோட்டுகளைக் கொடுத்து விட்டு 4 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் தபால் நிலையங்களில் ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணம் மாற்றப்பட்டது என்று செய்தி வந்துள்ளது. அந்த 4 ஆயிரம் ரூபாய்க்கு, புதிய இரண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே கொடுக்கிறார்கள்.

அந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய், மளிகைக் கடையிலோ, ஆட்டோ ஓட்டுனரிடமோ 100 ரூபாய்க்காக கொடுத்தால், அந்த மளிகைக் கடைக்காரரும், ஆட்டோ ஓட்டுநரும் மீதம் கொடுப்பதற்கு என்ன செய்வார்கள்? எங்கே போவார்கள்? ஒரு கிலோ கத்தரிக்காய் வாங்கவோ, ஒரு லிட்டர் பால் வாங்கவோ 2 ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா?.

கருப்புப் பணத்தை ஒழிக்கக் கச்சைக் கட்டிக் கொண்டிருப்பதாக கட்டியம் கூறுபவர்கள், 1000, 500 ரூபாய் நோட்டுகளை ஒழித்து விட்டு, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை முதலில் அறிமுகம் செய்வது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை இப்போதாவது உணர்வார்களா?.

தமிழ்நாட்டில் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து விட்டு, வேறு நோட்டுகளை மாற்றிக் கொள்ள 4 ஆயிரம் ரூபாய் ஒருவருக்கு என்று உச்சவரம்பு நிர்ணயித்து, அவ்வாறு மாற்றிக்கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதல் மாலை வரை வங்கிகளில் நீண்ட “கியூ”வில் நிற்பதை பத்திரிகைகள் எல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளன.

ஆனால் கருப்புப் பணம் வைத்திருப்பதாகக் கூறப்படும் எந்தப் பணக்காரராவது தங்கள் கருப்புப் பணத்தை மாற்றிக் கொள்ள அந்த நீண்ட “கியூ”வில் இடம் பெற்றதைப் பார்க்க முடிகிறதா?.

அது மாத்திரமல்ல; இந்த 4 ஆயிரம் ரூபாய் என்ற உச்சவரம்பை, அண்டை மாநிலங்கள் 8 ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்திக் கொண்டிருப்பதாகவும், அதற்குக் காரணம் அந்த மாநில முதல்வர்களின் முயற்சி என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் தமிழகத்திலே அப்படி உச்சவரம்பை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு இதுவரை ஏதாவது முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் துயரைப் போக்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றால் இல்லை.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூட, மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்காகத்தானே தவிர ஏழையெளிய மக்களின் துயரைப் போக்குவதற்கான நடவடிக்கை பற்றி எதுவும் கூறவில்லை என்பதில் இருந்து நாட்டு மக்களின் துன்ப துயரங் கள் அவருக்கு அவ்வப்போது அறிவிக்கப்பட்டனவா என்ற அய்யப்பாடு தோன்றுகிறது அல்லவா?.

மத்திய அரசுக்கு கருப்புப் பணத்தை ஒழிப்பது மட்டுமே லட்சியம் என்றால், ஏழையெளிய நடுத்தர மக்களைப் பாதிக்காமல் என்ன செய்யலாம் என்று பொருளாதார மேதைகளை அழைத்து யோசனை கேட்டிருந்தால் பல முடிவுகளை அவர்கள் சொல்லியிருப்பார்கள்.

தேசிய புலனாய்வுக் கழகத்தின் வேண்டுகோளின்படி, கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் துறை 2015-ம் ஆண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி, இந்தியப் பணப் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய். மொத்தப் பணப் புழக்கம் 16.24 லட்சம் கோடி ரூபாய். அதில் சுமார் 86 சதவீதம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் ஆகும். ஒரே நொடியில் இதை புழக்கத்தில் இருந்து எடுத்துவிட்டால் பொருளாதாரம் என்ன ஆகும்?.

நமது தேசிய வங்கிகளில் பெரிய முதலாளிகள் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் உள்ள தொகை 11 லட்சம் கோடி ரூபாய். அவர்கள் யார் யார் என்பது மத்திய பா.ஜ.க. அரசுக்கு நன்கு தெரியும். அந்தப் பெயர்களை வெளியிட வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியும் கூட, மோடி அரசு அதைச் செய்ய முன்வரவில்லை.

“பனாமா லீக்ஸ்” மூலம் கருப்புப் பணம் வைத்திருப்போரின் விவரங்கள் வெளிவந்து, அவை அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளன. அதைப்போல ஸ்விஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளிலும் கருப்புப் பணம் அடைகாத்துக் கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட கருப்புப் பணம் மொத்தம் 120 லட்சம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது.

கருப்புப் பணத்தின் பெரும் பகுதி வெளிநாடுகளில் அன்னிய நாட்டுக் கரன்சிகளில் பாதுகாப்பாகப் பதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இவற்றுக்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து, கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதைத் தவிர்த்து விட்டு, இப்படி இந்திய நாட்டு மக்களை, குறிப்பாக ஏழையெளிய நடுத்தர வர்க்கத்தினரை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?.

நேற்றையதினம் கோவாவில் பேசிய நமது பிரதமர் மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த 8-ந் தேதி இரவு அறிவித்தபோது கோடிக்கணக்கான மக்கள் நிம்மதியாக தூங்கினர் என்றும், சில லட்சம் ஊழல்வாதிகள் மட்டும் தங்கள் தூக்கத்தை இழந்தனர் என்றும் பேசியிருக்கிறார். உண்மை என்னவென்றால், பிரதமரின் அறிவிப்பு காரணமாக கோடிக்கணக்கான சாதாரண சாமானிய மக்கள் தூக்கமிழந்து துயரத்தோடும், பதைபதைப்போடும் நீண்ட வரிசைகளில் தங்கள் பணத்தை மாற்ற முடிவில்லாத் தவம் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

எனவே பிரதமர் மோடியின் அறிவிப்பு, நல்ல நோக்கம் கருதிச் செய்யப்பட்டதாக ஓரளவு வரவேற்கப்பட்ட போதிலும், அதனால் நடுத்தர, அடித்தட்டு வகுப்பு மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுடன், என்ன நோக்கத்திற்காக இந்த அறிவிப்பு செய்யப்பட்டதோ, அதுவே முழுமையாக வெற்றியடையாமல் போய் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடுமோ என்ற ஐயப்பாட்டினை மறுதலிக்க முடியாது.

இந்த அறிவிப்பு அண்மையில் நடைபெறவிருக்கின்ற சில மாநிலத் தேர்தல்களையொட்டி பா.ஜ.க. அரசினால் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறுகின்ற குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில் அளிக்கப்பட வேண்டும் என்பதோடு, ஏழையெளிய மக்கள் இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படுவதற்கும் தக்க உடனடி நிவாரணம் தேடி, தங்கள் மீது பொழியப்பட்டுள்ள வசவுகளைக் கழுவிப் பரிகாரம் காண, மத்திய பா.ஜ.க. அரசினர் முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg