நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு

Date:2017-08-11

(1502422878)201708110428044029_Nawaz-Sharif-Pakistan-Call-people_SECVPF.gif

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28–ந் தேதி அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

மேலும், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு வழக்கு பதிவு செய்து, 6 மாதங்களில் விசாரணை முடிய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து அவர் உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

பாகிஸ்தானில் 70 ஆண்டுகளில் இதுவரை எந்தவொரு பிரதமரும் தனது முழுப் பதவிக்காலத்தை நிறைவு செய்தது இல்லை.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் இருந்து தனது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம், லாகூருக்கு பேரணியாக புறப்பட்டார்.

மக்கள் மத்தியில் ஆவேசம்
வழியில் அவர் ராவல்பிண்டி நகர்ப்புறத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஆவேசமாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த நாட்டில் சராசரியாக ஒவ்வொரு பிரதமரும் ஒன்றரை ஆண்டுகாலம்தான் பதவி வகித்துள்ளனர். சிலர் தூக்கில் போடப்பட்டுள்ளனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு கை விலங்கு போட்டனர். சிலர் தலைமறைவாகி விட்டனர்.

ஆளுவதற்கு ஜனநாயக ரீதியில் நீங்கள் அளித்த உத்தரவை காப்பதற்கு, நீங்கள் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனநாயக நெறிமுறைகளுக்கு அப்பால் நீக்குவது தவிர்க்கப்பட வேண்டும்.

வாக்குறுதி தாருங்கள்
உங்கள் பிரதமரை இப்படிப்பட்ட வழியில் அவமானப்படுத்த நீங்கள் அனுமதிக்கக்கூடாது. இதில் நீங்கள் எனக்கு வாக்குறுதி தர வேண்டும்.

நீங்கள் (ஆதரவாளர்கள்) உங்கள் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளா விட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எதிர்காலத்திலும் இப்படி பதவி நீக்கம் செய்யப்படக்கூடும். எனக்கு மூன்றாவது முறையாக இது நடந்துள்ளது. இது உங்கள் ஓட்டுகளுக்கு கிடைத்த அவமதிப்பு இல்லையா?

மக்கள் கோர்ட்டு
ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று நீதிபதிகள் கூறி உள்ளனர். மோசடி குற்றச்சாட்டும் இல்லை. பிறகு ஏன் என்னை அவர்கள் தகுதி இழப்பு செய்தார்கள்?

இதை வரலாறு முடிவு செய்யட்டும் என்று நான் விட்டு விடுகிறேன்.

நீங்கள் இந்த முடிவை (சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை) ஏற்றுக்கொள்கிறீர்களா? (பொதுமக்கள் ‘இல்லை’ என்று பதில் கூறினர்). ஒரு கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கியது. இப்போது மக்கள் கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்குகிறது.

இந்த கூட்டம், பொது வாக்கெடுப்பாக அமைந்து உள்ளது. பாகிஸ்தான் மக்கள் கோர்ட்டு, எனக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளது.

நான் மீண்டும் பதவிக்கு வருவதற்காக போராடவில்லை.

நான் வீட்டுக்கு செல்கிறேன். நீங்கள் என்னை பதவியில் மீண்டும் அமர்த்த வேண்டும் என்று விரும்பவில்லை. ஆனால் நீங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் என்னோடு பக்க பலமாக நிற்க வேண்டும் என விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராவல்பிண்டியில் உள்ள பஞ்சாப் இல்லத்தில் நவாஸ் ஷெரீப் தங்கினார்.

வழக்கமாக அரை மணி நேரத்தில் கடந்து விடக்கூடிய தூரத்தை (இஸ்லாமாபாத்–ராவல்பிண்டி) அவர் கடந்து வர 12 மணி நேரத்துக்கு அதிகமாகிவிட்டது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg