ஹமீது அன்சாரி கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்

Date:2017-08-11

(1502424656)201708110334417080_Hameed-Ansari-comment-BJP-condemned_SECVPF.gif

புதுடெல்லி, 

‘‘இந்திய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை உள்ளது’’ என துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் ஹமீது அன்சாரி கூறி உள்ளார். இதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கருத்து, அரசியல் புகலிடம் தேடுவதற்காக கூறிய கருத்து என அந்தக் கட்சி கூறியது.

துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் டெல்லி மேல்சபை டி.வி.க்கு ஹமீது அன்சாரி சிறப்பு பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியில் அவர், ‘‘இந்திய முஸ்லிம்களுக்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட சமூகமாக கடந்த 70 ஆண்டுகளாக மட்டும் இல்லை. பல நூற்றாண்டுகளாகவே, அப்படித்தான் இருக்கிறது. தற்போதைய சூழல், அனைவரோடும் ஒற்றுமையாக வாழும் தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது’’ என்று கருத்து கூறினார்.

இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் நேற்று டெல்லி மேல்சபையில் நடந்த பிரிவு உபசாரத்திலும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.
அப்போது அவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறிய கூற்றை மேற்கோள் காட்டி, ‘‘அரசின் கொள்கைகளை எதிர்க்கட்சி குழுக்கள் நியாயமாக, சுதந்திரமாக, வெளிப்படையாக விமர்சிக்க அனுமதிக்காவிட்டால், அது ஜனநாயகத்தை கொடுங்கோன்மையாக சிதைத்தது போலாகி விடும்’’ என குறிப்பிட்டார்.

மேலும் ‘‘சிறுபான்மையினருக்கு அளிக்கிற பாதுகாப்பின் மூலம் ஜனநாயகம் சிறப்பு பெறுகிறது. அதே நேரத்தில் சிறுபான்மையினருக்கும் பொறுப்பு இருக்கிறது’’ என்றும் அவர் கூறினார்.

ஹமீது அன்சாரியின் கருத்துகளுக்கு பாரதீய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது பற்றி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா நேற்று கூறுகையில், ‘‘அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் ஓய்வுபெறும் நிலையில், அரசியல் கருத்துகள் வெளியிட்டுள்ளார். அவர் இன்னும் துணை ஜனாதிபதிதான். இத்தகைய கருத்துக்கள் அவரது உயர்பதவிக்கு கண்ணியம் சேர்ப்பதாக இல்லை. அவர் ஓய்வுக்கு பின்னர் அரசியல் புகலிடம் தேடுவதற்காகத்தான் இத்தகைய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது’’ என்று தெரிவித்தார்.

அத்துடன், ‘‘இத்தகைய உயர் பதவியில் உள்ள ஒருவரிடம் இருந்து இப்படிப்பட்ட ‘சிறிய கருத்துகளை’ யாரும் எதிர்பார்க்கவில்லை’’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg