‘பேட்டிங்குக்காக ஆட்டநாயகன் விருது பெற்றதை சிறப்பானதாக கருதுகிறேன்’ சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அந்தோணி தாஸ்

Date:2017-08-11

(1502425406)201708110048022872_Anthony-Das-of-cuapapak-Super-Gilles_SECVPF.gif

நத்தம், 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நத்தத்தில் நடந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை தோற்கடித்தது.

மழையால் பாதிக்கப்பட்டு 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் திருச்சி அணி நிர்ணயித்த 133 ரன்கள் இலக்கை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தலைவன் சற்குணம் (42 ரன்), சசிதேவ் (24 ரன்), அந்தோணி தாஸ் (39 ரன், 22 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. 5-வது வெற்றியை பதிவு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

வேகப்பந்து வீச்சாளரான 28 வயதான அந்தோணி தாஸ் பேட்டிங்கிலும் ஜொலித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:-உங்களது ஆட்டம் குறித்து சொல்லுங்கள்?

பதில்: இன்றைய இன்னிங்ஸ் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முக்கியமான கட்டத்தில் களம் இறங்கி பேட்டிங்கில் அனுபவித்து விளையாடினேன். மிடில் ஓவர்களில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டேன். களத்தில் நான் நிலைத்து விட்டால், நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பது தெரியும். அதனால் ஏதுவான பந்துகளுக்காக காத்திருந்தேன். சூழ்நிலையை துல்லியமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்ப பந்துகளை அடித்து விளாசினேன்.

ஆல்-ரவுண்டராக...

கேள்வி: இந்த ஆண்டில் ஆல்-ரவுண்டராக ஜொலிப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: கடந்த ஆண்டில் இறுதிக்கட்ட ஓவர்களை அடிக்கடி வீசினேன். ஆனால் இந்த ஆண்டில் இறுதிக்கட்டத்தில் குறைவான ஓவர்களே வீசியிருக்கிறேன். அது மட்டுமின்றி முதலாவது சீசனுடன் ஒப்பிடும் போது இந்த சீசனில் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்துள்ளேன். கடந்த முறை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தியதோடு, அதிகமான யார்க்கரை வீசினேன். எப்போதுமே பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எனது 100 சதவீத பங்களிப்பை அளிக்கிறேன். அதனால் இரண்டு ஆண்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை.

ஏற்கனவே இதுபோன்று நான் ஆல்-ரவுண்டராக விளையாடி இருக்கிறேன். இந்த ஆண்டில் பயிற்சியின் போது, ஆல்-ரவுண்டராக தயார்படுத்தப்பட்டேன். இது தான் களத்தில் எனக்கு உதவிகரமாக அமைந்தது. பயிற்சியாளர், கேப்டன் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். எப்போதெல்லாமல் பேட்டிங்கில் முன்வரிசையில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறதோ அப்போதெல்லாமல் நன்றாக ஆடியுள்ளேன். அதே போன்று தொடர்ந்து செயல்பட முயற்சிப்பேன். முன்வரிசையில் ஆடுவதில் எனக்கு நெருக்கடி எதுவும் இருப்பதாக உணரவில்லை. எனது ஆட்டத்தை உற்சாகமாக ரசித்து ஆடுகிறேன்.

தமிழக அணியில் இடம்

கேள்வி:-ஆட்டநாயகன் விருது பெற்றது குறித்து?

பதில்: கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நான் ஆட்டநாயகன் விருது வாங்கினேன். ஆனால் அது சிறந்த பந்து வீச்சுக்காக. இந்த முறை பேட்டிங்குக்காக பெற்றிருப்பதை சிறப்பானதாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியான தருணமாகும்.

கடந்த ஆண்டு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு தியோதர் கோப்பைக்கான தமிழக அணியில் எனக்கு இடம் கிடைத்தது. டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கும், பேட்டிங் திறமையை மேம்படுத்துவதற்கும் உதவிகரமாக இருக்கிறது. இந்த ஆட்டத்திற்கு முன்பாக எனது குடும்பத்தினரிடம் பேசினேன். அவர்கள், இன்றைய ஆட்டத்தில் நான் ஆட்டநாயகனாக முத்திரை பதிக்க வேண்டும் என்று கூறினார்கள். அது போலவே எனது சிறந்த பேட்டிங் இந்த ஆட்டத்தின் மூலம் வெளியாகும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஒரு குடும்பமாக...

கேள்வி: ஆதரவுகள் எப்படி உங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது?

பதில்: குடும்பத்தினர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எத்தகைய சூழ்நிலையிலும் பயிற்சியாளர் ஹரி சுப்பிரமணியமும் என் மீது நம்பிக்கை வைத்திருப்பார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மிகச்சிறந்த ஒரு அணி. அதில் நாங்கள் ஒரு குடும்பம் போல் இருக்கிறோம். நான் மோசமாக ஆடினாலும் கூட, அணி என் மீது நம்பிக்கை வைத்து சாதிப்பதற்கு தூண்டுகோலாக இருக்கிறது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அந்தோணி தாஸ் கூறினார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg