‘நிறத்தை வைத்து யாரையும் கிண்டல் செய்யாதீர்’ தமிழக வீரர் அபினவ் முகுந்த் உருக்கமான வேண்டுகோள்

Date:2017-08-11

(1502425911)201708110038473254_Tamilnadu-Abhinav-Mukunds-tense-appeal_SECVPF.gif

சென்னை, 

இந்திய கிரிக்கெட் வீரர் தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்த், தனது உடல் நிறத்தை சிலர் கேலி செய்து சமுக வலைதளத்தில் வெளியிடுவதால் வேதனை அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கை வருமாறு:-

10 வயதில் இருந்து நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். படிப்படியாக வளர்ந்து, இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்து இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது 15-ம் வயதில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி உள்ளேன். சிறு வயது முதலே எனது நிறம் குறித்து மக்களின் பார்வை எனக்கு புதிராகவே இருந்து வருகிறது.

கிரிக்கெட் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதற்காகவும் பெரும்பாலும் மைதானத்திலேயே அதிக நேரத்தை செலவிடுவது உண்டு. நான் வசிக்கும் சென்னை, வெயில் அதிகமாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும். அதன் தாக்கத்தால் எனது நிறம் குறைந்திருக்கலாம். அதற்காக நான் என்றுமே வருத்தப்பட்டதில்லை. எனது நிறத்தை மையப்படுத்தி என்னை பல்வேறு பெயர்களில் அழைத்து கிண்டல் செய்துள்ளனர். அதற்கு நான் சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்த்து விட்டு சென்று விடுவேன். இது எனது லட்சியத்தை எந்த வகையிலும் பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டேன்.

தற்போது சமுக வலைதளங்களில் இந்த மாதிரி வசைபாடும் போக்கு மோசமாகியுள்ளது. இன்று நான் எனக்காக மட்டும் இதைப் பேசவில்லை. தங்கள் உடல் நிறம் காரணமாக அவமானங்களை சந்திக்கும் ஏராளமான மக்களுக்காக பேசுகிறேன். இந்த விஷயத்தில் மக்களின் மனநிலை மாற வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். நிறம் மட்டுமே அழகு அல்ல. உண்மையாக இருங்கள். லட்சியங்களில் கவனமாக இருங்கள். உங்கள் நிறம் விஷயத்தில் சஞ்சலமின்றி சவுகரியமாக இருங்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயத்துக்கும், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நிறபேதத்தை வைத்து மற்றவர்களை சீண்டுபவர்கள் குறித்தே அவ்வாறு கூறினேன் என்று முகுந்த் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆதரவு குரல் கொடுத்துள்ளார். ‘சமுக வலைதளங்களில் படியுங்கள், கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள்’ என்று அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். 

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg