மலிவுவிலை இந்திரா உணவகம் கர்நாடகம் முழுவதும் திறக்கப்படும்: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

Date:2017-10-12

(1507782024)201710120538450467_After-Bengaluru-Indira-Canteens-to-be-opened-in-other-parts_SECVPF.gif

பெங்களூரு:

கர்நாடக மந்திரி சபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் மலிவு விலை இந்திரா உணவகம் தொடங்கப்பட்டு உள்ளது. இதே போல் மாவட்ட, தாலுகா தலைநகரங்கள் மற்றும் மக்கள்தொகை 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள சிறிய நகரங்கள் என கர்நாடகம் முழுவதும் இந்திரா உணவகத்தை ஜனவரி 1-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்ய நவம்பர் மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டமைப்பு பணிகள் முடிக்கப்படும்.

இது மட்டுமின்றி மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், ஆஸ்பத்திரிகளிலும் இந்த உணவகம் திறக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது ஜனவரி 1-ந் தேதி மாநிலத்தில் 171 இடங்களில் 246 உணவகங்கள் திறக்கப்படும். இதற்கு ஒரு நாளைக்கு மானியமாக ரூ.29 லட்சம் வழங்கப்படும். அதாவது மாதத்திற்கு ரூ.9 கோடி மானியம் வழங்க மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 13-ந் தேதி பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரியின் ‘கியாஸ் பாக்ய’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தலா ரூ.4,040 செலவில் கியாஸ் இணைப்பு மற்றும் அடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 28 லட்சம் பயனாளிகள் பயன் பெறுவார்கள். 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயனாளிகளின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும். இந்த திட்டத்திற்கு ரூ.1,137 கோடி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

மண்எண்ணெய் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இலவசமாக எல்.இ.டி. பல்புகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு உள்பட 10 மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் 3 வருட டிப்ளமோ மருத்துவ படிப்பு தொடங்கப்படும். ரூ.61.78 கோடியில் புதிய நவீன ஆம்புலன்ஸ் வாகனங்கள் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் சேவைக்கு வந்தவுடன் பழைய ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையில் இருந்து நீக்கப்படும்.

ரேஷன் கடைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பயிற்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு தாலுகா உறுப்பினர்களுக்கு தலா ரூ.150, கிராம உறுப்பினர்களுக்கு ரூ.75 வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 46 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை(ஐ.டி.ஐ.) தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையங்களுக்கு ரூ.20.27 கோடி செலவில் புதிய உபகரணங்கள் வாங்கப்படும்.

மேலும் 46 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு புதிய மின்சாதன பொருட்கள் வாங்க ரூ.16.30 கோடி ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயாப்புரா மாநகராட்சி எல்லையில் கையகப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கு புதிய வழிகாட்டு மதிப்பின்படி நிவாரணம் வழங்கப்படும். பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகாவில் உள்ள மூடலகியை தலைநகரமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும்.

இவ்வாறு மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா கூறினார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg