டெல்லி பட்டாசு வியாபாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு

Date:2017-10-12

(1507782130)201710120406016121_Delhi-cracker-traders-petition-in-Supreme-Court_SECVPF.gif

புதுடெல்லி:

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டல பகுதிகளில் பட்டாசு மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கடந்த மாதம் 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், டெல்லியில் பட்டாசு விற்க தடை விதித்து கடந்த நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்து கடந்த 9-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் டெல்லியில் பட்டாசு விற்பதற்கு விதிக்கப்பட்ட தடை வருகிற 31-ந் தேதி வரை தொடரும் எனவும், பட்டாசு விற்பனையை அனுமதிக்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பு நவம்பர் 1-ந் தேதி முதல்தான் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் 19-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பட்டாசு விற்பனையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை கடந்த மாதம் நீக்கப்பட்டதால், தீபாவளி விற்பனைக்காக டெல்லியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட பட்டாசு வியாபாரிகள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து தமிழ்நாட்டில் இருந்து பட்டாசுகள் வரவழைத்துள்ளனர். ஆனால் திடீரென்று சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள தடை, பட்டாசு விற்பனையாளர்கள் அனைவருக்கும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

தீபாவளிக்காக மேலும் பட்டாசுகளை வரவழைக்காமல் ஏற்கனவே உள்ள இருப்பை மட்டுமாவது விற்பனை செய்வதற்கு கோர்ட்டு அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ள வியாபாரிகள், அதற்கு வசதியாக சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவை திருத்தம் செய்து பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வெள்ளிக்கிழமை (நாளை) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg