ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : தென்ஆப்பிரிக்க அணி வெற்றி

Date:2018-03-13

(1520913989)201803130209008211_2nd-Test-against-Australia-South-Africa-wins_SECVPF.gif

போர்ட்எலிசபெத்,

ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட்எலிசபெத் நகரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலிய அணி 243 ரன்னும், தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்னும் எடுத்தன.

பின்னர் 139 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 63 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து இருந்தது. மிட்செல் மார்ஷ் 39 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா 239 ரன்னில் ஆல்-அவுட்

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன் தொடர்ந்து ஆடினார்கள். ரபடாவின் அசுர வேகப்பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. நேற்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் (45 ரன்) ரபடா பந்து வீச்சில் போல்டு ஆனார்.

அடுத்து களம் கண்ட கம்மின்ஸ் (5 ரன்), மிட்செல் ஸ்டார்க் (1 ரன்) ரபடா பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்கள். நாதன் லயன் 5 ரன்னிலும், ஹேசில்வுட் 17 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 79 ஓவர்களில் 239 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சற்று தாக்குப்பிடித்து ஆடிய டிம் பெய்ன் 28 ரன்னுடன் (50 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ரபடா அபாரம்

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேஷவ் மகராஜ், நிகிடி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். முதல் இன்னிங்சில் ரபடா 5 விக்கெட்டுகள் சாய்த்து இருந்தார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அவர் 11 விக்கெட்டுகளை கபளகரம் செய்தார். 22 வயதான காஜிசோ ரபடா ஒரு டெஸ்ட் போட்டியில் 10 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டை வீழ்த்துவது இது 4-வது முறையாகும்.

இதனை அடுத்து 101 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டீன் எல்கர் (5 ரன்) நாதன் லயன் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மார்க்ராம் (21 ரன்) ஹேசில்வுட் பந்து வீச்சில் கேப்டன் ஸ்டீவன் சுமித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தென்ஆப்பிரிக்க அணி வெற்றி

அடுத்து வந்த ஹசிம் அம்லா 27 ரன்னிலும், டிவில்லியர்ஸ் 28 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 22.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் டுபிளிஸ்சிஸ் 2 ரன்னுடனும், புருன் 15 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அடுத்த ஆட்டம்

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் 22-ந் தேதி தொடங்குகிறது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg