தகவல் துகள்கள்: அசத்தல் செவ்வாய் பயணம் ஆச்சரிய 'டிவி' தொடர் ஆரம்பம்

Date: 2016-10-26 முகப்பு

(1477484266)mars.jpg

இந்தியாவின், 'மங்கள்யான்' திட்டம் பற்றிய ஆவணப் படத்தை எடுத்த, 'நேஷனல் ஜியாகிரபிக்' சானல், இப்போது செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் அமெரிக்காவின் திட்டத்தை பற்றி, 'மார்ஸ்' என்ற ஆவணத் தொடரை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது.
இந்தத் தொடரில் அறிவியல்பூர்வ உண்மையையும், விரைவில் சாத்தியமாகக் கூடியவைகளை கற்பனையாகவும் சித்தரிக்கப் போவதாக அந்த சேனலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அரசின் விண்வெளி அமைப்பான, 'நாசா' முதல் தனியார் முயற்சிகளான, 'ஸ்பேஸ் எக்ஸ்' வரை, செவ்வாய்க்கு மனிதர்களை எப்படி அனுப்பப் போகின்றனர் என்பதை இத்தொடர் ஒருபக்கம் விவரிக்கும். இந்த, 'உண்மை' பகுதியில் எலான் மஸ்க், ஐரோப்பிய விண்வெளி வீரர்கள், நாசா விஞ்ஞானிகள் போன்றோர், தங்கள் அசல் விண்கலன்கள், சாதனங்கள் தயாரிக்கப்படுவதை, 'மார்ஸ்' தொடர் காட்டும்.
இன்னொரு பக்கம், ஏற்கனவே செவ்வாய் சென்று இறங்கி, குடியிருப்புகளை அமைக்க முயற்சிக்கும் ஒரு அமெரிக்க குழு சந்திக்கும் சவால்களை, நடிகர்கள் மூலம், 'மார்ஸ்' தொடர் விவரிக்கும். கற்பனை கலந்த இந்தப் பகுதியில், அடுத்த, 15 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட உள்ளதைப் போன்றே இருக்கும் விண்கலன்கள் மற்றும் சாதனங்களை காட்டவுள்ளனர். வரும், 2030க்குள் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பவிருப்பதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருப்பதால், 'இத்தொடர் அறிவியல் புனைவல்ல. விரைவில் நடக்கவுள்ளதைக் காட்டும் ஆவணப்படமாகவே கருத வேண்டும்' என்கிறார், மார்ஸ் தொடரின் இயக்குனரான ரான் ஹோவர்ட்.

Advertisments

Standard Advertisments

(1486123912)side.jpg